எச்சரிக்கை !
வழமையான வலைமேய்ச்சலில் நல்லதையே தேடும் நன்னோக்கில் கிடைத்த அதிர்ச்சி தகவல்தான் இது. ஒவ்வொருவரும் அவசியம் இதன் விபரீத வீரியம் அறிந்து விழித்துக் கொள்ள வேண்டும். வேலி போட்டிருக்கிறோம் வேட்டியை இறுக்கி கட்டியிருக்கிறோம் என்று தூங்கிவிடாதீர்கள் ! அவைகள் என்றும் அறுபடலாம் அவிழ்க்கப்படலாம்.
இது ஒரு வியாதியாகி பின்னர் முற்றிக் கொண்டு மனநல மருத்துவர்களுக்கு கப்பம் கட்டும் அடுத்த தலைமுறையை உருவாக்க வழி வகைகளை செய்யாதீர்கள்...
சகோதர, சகோதரிகளே... உங்களிடம் உருக்கமாக வேண்டிக் கொள்கிறோம், பாதுகாப்புடன் இருங்கள் வீட்டிற்குள் மட்டுமல்ல உங்களின் உள்ளங்களுக்குள் அனுமதியின்று நுழையும் இவ்வகை ஊடகங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
இவ்வகையான வியாதியைப் பரப்பும் அனைத்து ஊடகங்களிலிருந்தும் பிள்ளைகளை விலக்கி வையுங்கள் நீங்களும் அதனை விட்டும் விலகிவிடுங்கள் அதற்கு முன்னோடியாக இருந்திடுங்கள் Please !
ஃபேஸ்புக், டிவிட்டரில் மூழ்கிக் கிடப்பது சரியா ?
''கல்லூரி மாணவியான என் மகளின் படிப்பில் சமீபகாலமாக தடுமாற்றம் தென்படுகிறது. படிப்பு, நண்பர்கள் என கொஞ்சம் கொஞ்சமாக விலகி, சமூக வலைதளங்களே (ஃபேஸ்புக், டிவிட்டர்) கதி என கிடக்கிறாள். அவளை வழிக்கு கொண்டுவர என்ன செய்யலாம்?'' என்று தவிப்போடு கேட்டிருக்கும் விழுப்புரம் வாசகிக்காக கவுன்சலிங் டிப்ஸ் தருகிறார் திருச்சியைச் சேர்ந்த மனநல மருத்துவர் எம்.ராஜாராம்.
"திண்ணைப் பேச்சு, பேனா நட்பு வட்டம் போன்றவற்றின் லேட்டஸ்ட் வடிவம்தான், சமூக வலைதளங்கள். இளைஞர்கள் அவற்றைத் தவிர்க்க முடியாது. ஏனெனில், பொழுதுபோக்க மட்டுமல்ல... வர்த்தகம், படிப்பு, ஆலோசனை, மனப்பகிர்வு என பல விஷயங்களிலும் இந்த வலைதளங்கள் பெரும் உதவி செய்கின்றன. ஆனால், நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அளவிலான அறிகுறிகள், உங்கள் மகள் இந்த சமூக வலைதள பயன்பாட்டில் கிட்டத்தட்ட அடிமையாக இருப்பதையே காட்டுகிறது.
தற்போது மனநல மருத்துவமனைகளுக்கு அழைத்து வரப்படும் இளைய வயதினர் பலரையும் பார்க்கும்போது, 'இன்டர்நெட் அடிக்ஷன் சிண்ட்ரோம்' (Internet Addiction Syndrome) என்று புதிதாக பெயர் சூட்டுமளவுக்கு, மனநலம் சார்ந்த புதிய பிரச்னை உருவாகியிருக்கிறது என்றே சொல்லத் தோன்றுகிறது.
முதலில், உங்கள் மகளை கவனிக்கும் முன், அவரைச் சுற்றியுள்ள சூழ்நிலையை சற்று அலசுங்கள். குடும்பத்தில் எல்லோரும் அவருடன் சரியாகப் பழகுகிறீர்களா, அவர் சொல்வதைக் காது கொடுத்து கேட்கிறீர்களா, அவரோடு குவாலிட்டியான நேரம் செலவிடுகிறீர்களா... என்பதை ஆராய்ந்து பாருங்கள். நடைமுறை உலகம் புறக்கணிக்கும் போதுதான் இளைஞர்கள் வேறு போக்கிடம் தேடுவார்கள். அது உறவினர்களாகவோ, கல்லூரி நட்பு வட்டமாகவோ இருக்கும்போது பெரிய பிரச்னையைத் தந்துவிடாது. அப்படியே பிரச்னை எழுந்தாலும், எப்படியும் உங்கள் கவனத்துக்கு எட்டிவிடும்.
ஆனால், சமூக வலைதளங்களில் ஊர் கடந்து, கடல் கடந்து முகமறியா நபர்களிடம், அவர்களின் சுயரூபம் தெரியாது நட்பு பாராட்டுகிறேன் பேர்வழி என அலைபாயும்போது... நிறைய நிழல் நடவடிக்கைகளில் சிக்க வாய்ப்பாகிவிடும். அதிலும் போதிய முதிர்ச்சி இல்லாவிட்டால் சுலபத்தில் பல தீய சக்திகளுக்கு இவர்கள் இரையாவார்கள்.
பொதுவாக, தனிமையில் தங்கள் அடையாளத்தை மறைத்துக்கொண்டு, அதேபோன்ற இன்னொரு நபரிடம் சாட்டிங் செய்பவர்கள், தங்கள் அந்தரங்கத்தின் புனிதத்தை ஒதுக்கி வைத்துவிட்டு எல்லைமீற அதிகம் வாய்ப்பிருக்கிறது. முகம் தெரியாத நபரை எளிதில் நம்பிவிடுவது, வார்த்தை ஜாலத்தில் விசாரிப்பவர்களிடம் எல்லாம் தன் புலம்பலைக் கொட்டுவது, தன்னை பலரும் கவனிக்கிறார்கள், அவர்களின் கவனிப்பும் ஆறுதலும் தொடர வேண்டும்... இப்படி பல உள் உந்துதல்களோடு மேலும் மேலும் அவர்கள் இந்த சமூக தளங்களில் கட்டுண்டு போகிறார்கள்.
ஃபேஸ்புக்கை தனது பிரசாரத்துக்கான உத்தியாகப் பயன்படுத்தி அமெரிக்க அதிபராக உயர்ந்த பராக் ஒபாமாவே, ஒரு பொறுப்பான தந்தையாக தன்னுடைய பெண் குழந்தைகளுக்கு, இப்போதைக்கு ஃபேஸ்புக் தேவையில்லை என்று தடை செய்து, அதை வெளிப்படையாக அறிவிக்கவும் செய்திருக்கிறார். தனது தேசத்து பெற்றோர்களுக்கும் இதுகுறித்த கவலையை வெளிப்படுத்தியிருக்கிறார். வளர்ந்த நாடுகளிலேயே இப்படி உஷாராகும்போது, நாம் இன்னும் உஷாராகவே இருக்க வேண்டும்.
ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் தினமும் 45 நிமிடங்கள் முதல் அதிகபட்சமாக ஒரு மணி நேரம் செலவிடுவது ஓ.கே... அதைத் தாண்டி பின்னிரவு வரை பொழுதுபோக்குவது, குடும்ப உறவு, நண்பர்களைத் தவிர்ப்பது போன்றவை கவலைக்குரியவை.
உங்கள் மகளுடன் சகஜமாகப் பேசி அவரது சமூக வலைதளப் பயன்பாடு, நண்பர்கள் விவரங்களை உண்மையான ஆர்வத்தோடு அறிந்து கொள்ளுங்கள். அந்தரங்க தகவல்கள், புகைப்படங்களைப் பதிவேற்றுவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்துங்கள். அவரது சமூகப் பழக்கத்தில் நல்ல விஷயங்களைக் கண்டுபிடித்துப் பாராட்டுங்கள். குறையான விஷயங்களைக் காயப்படுத்தாது மென்மையாக எடுத்துச் சொல்லுங்கள். அவர் அக்கவுன்ட் வைத்திருக்கும் சமூக வலைதளத்திலேயே உங்களுக்கும் ஒரு அக்கவுன்ட் துவங்கி, உங்கள் மகளின் சமூக நண்பர்களில் ஒருவராகுங்கள். இது உங்கள் மகளின் இணைய செயல்பாட்டை சுத்திகரிக்கவும், கண்காணிக்கவும் உதவும். பல்வேறு வகையிலும் அவரின் தனிமைச் சந்தர்ப்பங்களைத் தவிர்த்து பிஸியாக வைத்திருக்கும் சூழலை ஏற்படுத்துங்கள்.
இந்த வழிமுறைகள் எல்லாம் சரிவராவிட்டால், விரைவாக மனநல மருத்துவரிடம் கவுன்சலிங் தருவதே நல்லது. மாறாக, அவரது இணைய பயன்பாட்டுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கினால், மன அழுத்தம் அதிகமாகி வேறு பாதையில் பிரச்னை வெடிக்கக்கூடும்!''
நன்றி : அவள்விகடன்
அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் நன்னடத்தை தொடரும்...
- அதிரைநிருபர் குழு
No comments:
Post a Comment