June 17, 2012

ஐ.நா எச்சரிக்கையை மீறி வடகொரியாவுக்கு ஏவுகணை வாகனத்தை ஏற்றுமதி செய்த சீனா !



China exports missile vehicle to North Korea.ஐக்கிய நாடுகள் சபையின் தடை இருந்தபோதிலும் அதையும் மீறி வட கொரியாவுக்கு ஏவுகணை செலுத்து வாகனத்தை சீனா ஏற்றுமதி செய்துள்ளது.  இந்த விஷயம் அமெரிக்காவுக்குத் தெரிந்த போதிலும், அனாவசியமாக சீனாவை எரிச்சலூட்ட விரும்பாததால் இத்தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று ஜப்பானிய நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.ஜப்பானிய அரசு அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதிலிருந்தே வட கொரியாவுக்கு சீனா
உதவி செய்தது புலனாகியுள்ளது என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது. நான்கு லாரிகள் நிறைய ஏவுகனை செலுத்தும் வாகனங்கள் சீனாவிலிருந்து வட கொரியாவுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
 வட கொரியா நிறுவனர் கிம்-2 சுங்கின் நூற்றாண்டு பிறந்த நாளில் வட கொரியா நிகழ்த்திய ராணுவ அணிவகுப்பில் சீனாவிலிருந்து அனுப்பப்பட்ட வாகனங்கள் இடம்பெற்றிருந்ததாக ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் தடையை மீறி ஏவுகணை செலுத்து வாகனத்தை சீனா அனுப்பியுள்ளது. அணுகுண்டு தயாரிப்பில் வட கொரியா ஈடுபடுவதாகக் கூறி அந்நாட்டின் மீது ஐக்கிய நாடுகள் சபை தடை விதித்திருந்தது.
 கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி சீனாவிலிருந்து 16 சக்கரங்கள் கொண்ட வாகனம் கம்போடியாவில் பதிவு செய்யப்பட்ட கப்பலில் ஏற்றப்பட்டதை உளவு செயற்கைக்கோள் படம் பிடித்துள்ளது. இந்த கப்பல் ஒசாகா வழியாக சென்றபோது, ஜப்பானிய கடலோரக் காவல்படை இந்தக் கப்பலை சோதித்துள்ளது.  ஏவுகணை செலுத்து வாகனம் ஒவ்வொன்றும் 21 மீட்டர் (69 அடி) நீளம் கொண்டது.
சீன விண்வெளி அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் துணை நிறுவனம் நான்கு வாகனங்களை இவ்விதம் அனுப்பியுள்ளது தெரியவந்துள்ளது. 16 சக்கரங்கள் கொண்ட வாகனங்களைத்தான் ஏவுகணை ஏவுவதற்கு சீனா பயன்படுத்துகிறது.

No comments:

Post a Comment