தஞ்சை மாவட்டத்தில் 2–ம் கட்டமாக 2½ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஞாயிற்றுக் கிழமை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இந்தியாவில் கடந்த 1995–ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு 18–வது சுற்றின் 2–வது தவணை முகாம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) இந்தியா முழுவதும் நடைபெற உள்ளது. இந்த முகாமின் நோக்கமானது போலியோ நோயை முற்றிலும் ஒழிப்பதாகும்.
தஞ்சை மாவட்டத்தில் கடந்த மாதம் 20–ந் தேதி நடைபெற்ற முதல் முகாமில் 2 லட்சத்து 42 ஆயிரத்து 52 உள்ளூர் மற்றும் வெளியூர் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நாளை தஞ்சை மாவட்டத்தில் 2–வது தவணை போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணியில் 6 ஆயிரத்து 40 பணியாளர்களும், 178 மேற்பார்வையாளர்களும், 120 மருத்துவ அலுவலர்களும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
1,510 மையங்கள்
நகரப்பகுதிகளில் 128 மையங்களும், ஊரக பகுதிகளில் 1382 மையங்களும் என மொத்தம் 1,510 மையங்களில் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பள்ளிக்கூடங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், பஸ் நிலையங்கள், ரெயில்நிலையங்கள், கோவில்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்களில் நாளை முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு 24 மணி நேரமும் சொட்டு மருந்து வழங்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுசுகாதாரத்துறை, ஊட்டச்சத்துத்துறை, சமூகநலத்துறை, வருவாய்த்துறை, கல்வித்துறை, ஊரகவளர்ச்சித்துறை, நகராட்சிகள், உள்ளாட்சித்துறை, அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் இந்த திட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளன.
இந்த திட்டம் சார்ந்த மேற்பார்வை பணிக்கு தகுந்த ஏற்பாடுகள் மற்றும் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. முகாம்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் குழந்தைகள் யாராக இருந்தாலும் சொட்டு மருந்து வழங்கப்பட்டு குழந்தையின் இடது கை சுண்டு விரலில் அடையாள மை வைக்கப்படும். வேலை நிமித்தமாக வெளிமாநிலங்களில் இருந்து வந்து தற்காலிகமாக தங்கியிருக்கும் மக்களின் குழந்தைகளுக்கும் மற்றும் நாடோடிகளாக இடம் பெயர்ந்து செல்லும் மக்களின் குழந்தைகளுக்கும் விடுபடாமல் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கு நடமாடும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேற்கண்டவாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment