February 21, 2013

தஞ்சை மாவட்ட ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு தொடக்கம்



தஞ்சை மாவட்ட ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் இளஞ்சிறார் சிறப்பு காவல் குழுமத்தை தஞ்சை துணை போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்.

ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு

தஞ்சையில், ஆள்கடத்தல் மற்றும் சிறுவர்கள் மீதான பிரச்சினைகளை விசாரிக்க ‘‘ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் இளஞ்சிறார் சிறப்பு காவல் குழுமம்’’ என்ற தனிப்பிரிவை தொடங்க வேண்டும் என்று தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி. ஜெயராம் உத்தரவிட்டார்.


அதன்பேரில், தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அன்பு நேரடி மேற்பார்வையில், தஞ்சை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் இளஞ்சிறார் சிறப்பு காவல் குழுமம் அமைக்கப்பட்டது. இதன் தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவில் தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் கலந்து கொண்டு சிறப்பு காவல் குழுமத்தை தொடங்கி வைத்து பேசினார்.

பெண்கள், சிறுவர்கள் மீதான பிரச்சினைகள்

நில அபகரிப்பு, லஞ்ச ஒழிப்பு போலீஸ் போன்று அமைக்கப்பட்ட தனிப்பிரிவு அமைப்புதான் இந்த ‘‘ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் இளஞ்சிறார் சிறப்பு காவல் குழுமம்’’. சிறுவர்கள், பெண்களை கடத்தி கட்டாயப்படுத்தி வேலைக்கு அமர்த்துவது, விபசாரத்தில் ஈடுபடுத்துவது, பிச்சை எடுக்க வைப்பது, வீட்டு வேலைக்கு அமர்த்துவது போன்ற பிரச்சினைக்களை இப்பிரிவு போலீசார் விசாரித்து நடவடிக்கை மேற்கொள்வார்கள்.

தஞ்சை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரா, இப்பிரிவுக்கும் இன்ஸ்பெக்டராக செயல்படுவார். மேலும் இதில் 2 சப்–இன்ஸ்பெக்டர்கள், 4 ஏட்டுகள், 4 போலீசார் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் இதுபோன்ற பிரச்சினை எங்கு நடந்தாலும் 94430–92560 என்ற செல்போன் எண்ணுக்கும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இப்பிரிவின் மூலம் மீட்கப்பட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, அவர்களின் வாழ்வாதாரத்திற்காக அரசால் நிவாரண தொகை வழங்கப்படும் என்று துணை போலீசார் சூப்பிரண்டு சங்கர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment