March 16, 2012

இஸ்ரேல் தூதரக அதிகாரியின் கார் குண்டு வெடிப்பு: ஈரானியர்களை பிடிக்க சர்வதேச போலீஸ் உதவி நாடல்...

 புதுடில்லி: டில்லியில் இஸ்ரேலிய தூதரக அதிகாரியின் காரில் குண்டு வெடித்ததில், ஈரான் நாட்டைச் சேர்ந்த மூன்று பேருக்கு தொடர்புள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர்களை கைது செய்து, இந்தியாவிடம் ஒப்படைக்க கோரப்பட்டுள்ளது.
டில்லியில் கடந்த மாதம் 13ம் தேதி, பிரதமர் வீட்டருகே இஸ்ரேலிய தூதரக அதிகாரி காரில் சென்று கொண்டிருந்த போது, டூ வீலரில் பின்னால் வந்த நபர், காந்தத்தின் மூலம் காரில் வெடிகுண்டை ஒட்ட வைத்துவிட்டுச் சென்றார்.
 சிறிது நேரத்தில் காரில் குண்டு வெடித்ததில், தூதரக பெண் அதிகாரியும், கார் டிரைவரும் பலத்த காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி, ஈரானிய பத்திரிகை நிருபர் சயத் முகமது அகமது காஸ்மி, 50, என்பவரை கடந்த 6ம் தேதி கைது செய்துள்ளனர். ஈரானைச் சேர்ந்த அப்ஷார், சயத் அலி, முகமது ரெசா ஆகியோர் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காஸ்மி, வெடிகுண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பில்லாதவராக இருந்தாலும், வெடிகுண்டு வைத்தவர்களுக்கு இவர் மறைமுக உதவி செய்துள்ளார். காஸ்மி கடந்த ஆண்டு இரண்டு முறை ஈரானுக்கு சென்று வந்துள்ளார். அப்போது, இந்த மூன்று பேரை சந்தித்துள்ளார்.


இஸ்ரேலிய தூதரக அதிகாரியின் கார் எங்கெல்லாம் செல்கிறது என்பது குறித்து, மூன்று ஈரானியர்கள் டில்லி வந்து நோட்டமிட்டுள்ளனர். இவர்கள் இந்த உளவு வேலை பார்க்க காஸ்மி, டூவீலர் வாங்கிக் கொடுத்துள்ளார். ஈரானியர்களிடமிருந்து காஸ்மி 3.80 லட்ச ரூபாயும், அவரது மனைவி 18 லட்சத்து 78 ஆயிரம் ரூபாயும் பெற்றுள்ளனர். குண்டு வெடிப்பு நடப்பதற்கு முன்னதாக மூன்று பேரும் ஈரானுக்கு சென்று விட்டனர். ஈரானைச் சேர்ந்த மேற்கண்ட மூவரைத் தேடி, இந்தியாவிடம் ஒப்படைக்கும் சர்வதேச போலீசாரிடம், டில்லி போலீசார் கோரியுள்ளனர். இந்த விஷயத்தில் இந்தியாவுடன் ஒத்துழைக்கும்படி ஈரான் அரசிடமும் கோரப்பட்டுள்ளதாக டில்லி போலீஸ் கமிஷனர் பி.கே.குப்தா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment