April 27, 2012

மே-1 முதல் பட்டுக்கோட்டையிலும் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை



கடந்த மார்ச்-5,2012 முதல் அதிராம்பட்டினத்தில் நகர பேரூராட்சி மன்ற தலைவர் S.H.அஸலம் முயற்சியால் ப்ளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் ப்ளாஸ்டிக் பைகள் கடைகளில் விற்பதும், பயன்படுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது. 

மேலும், அக்கம்பக்க ஊர்களிலும் இதைத் தடைசெய்ய சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப் பட்டது. இதனைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில் மே 1- ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது .

இதுகுறித்து பட்டுக்கோட்டை நகராட்சி என்ஜினீயர் மற்றும் ஆணையர் (கூடுதல் பொறுப்பு) ராமலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட 40 மைக்ரான் தடிமானத்திற்கு கீழ் உள்ள பொருட்கள் பயன்பாட்டிற்கும் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நகரில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், பொதுமக்கள் 40 மைக்ரானுக்குட்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து துணி பை, பேப்பர் கப், பாத்திரங்களை பயன்படுத்தி பொருட்களை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யவோ அல்லது பயன்படுத்துவோரிடம் இருந்து பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்வதுடன் அபராதம் விதிக்கப்பட்டு சட்ட ரீதியான மேல்நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வியாபாரிகள், உற்பத்தியாளர்கள் 40 மைக்ரான் தடிமானத்திற்கு மேற்பட்ட பிளாஸ்டிக் பைகளை தயாரிப்பாளரின் பெயர் மற்றும் முகவரி, பையின் அடர்த்தி, ஐ.எஸ்.ஐ. தரச்சான்று குறியீட்டு எண் ஆகியவை அச்சிடப்பட்டு இருக்க வேண்டும்.

40 மைக்ரானுக்கு மேற்பட்ட பிளாஸ்டிக் பைகளை வியாபாரிகள் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்க கூடாது. குறிப்பிட்ட விலை நிர்ணயித்து அதை வசூல் செய்த பின்னரே விற்பனை செய்ய வேண்டும். பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தவிர்த்து சுற்றுப்புற சூழல் பாதுகாக்க நகராட்சி நிர்வாகத்துடன் பொதுமக்களும், வர்த்தக நிறுவனங்களும் ஒத்துழைக்க வேண்டும். மே 1-ஆம்தேதி முதல் விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் பட்டுக்கோட்டைக்கு முன்னோடியாக அதிராம்பட்டினம் செயல்பட்டதோடு அதற்கான நடவடிக்கைகளைப் பரவலாக்கியதை வாசகர்கள் சார்பில் அதிரை பேரூராட்சி நிர்வாகம், சேர்மன், துணை சேர்மன் மற்றும் ஊர்மக்களுக்கு MMWA BROTHERS  பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

No comments:

Post a Comment