புதுடெல்லி:கடந்த மூன்றரை ஆண்டுகளில் 16 கருணை மனுக்கள் மீது முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மாநிலங்களவையில் நேற்று(புதன்கிழமை) தெரிவித்தார்.
மாநிலங்களவையில் இதுக்குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் ப.சிதம்பரம் கூறியது: உலகம் முழுவதும் மரண தண்டனை தொடர்பாக 2 விதமான கருத்துகள் உள்ளன. ஒன்று, மரண தண்டனையை ஒழிப்பது. மற்றொன்று குறிப்பிட்ட சில வழக்குகளுக்கு மட்டும் மரண தண்டனையை ஏற்பது. இந்தியச் சட்டம் அரிதினும் அரிதாக மரண தண்டனையை பரிந்துரைக்கிறது.
மரண தண்டனையை ஒழிப்பதற்கு சட்ட ஆணையம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. எனவே, மரண தண்டனை குறித்து மத்திய அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை.
எனவே, இப்போதைக்கு மரண தண்டனை பற்றி எந்த மறு ஆய்வும் இல்லை. ஆனால், மறு ஆய்வுக்கான காலம் வரும். குடியரசுத் தலைவரால் மரண தண்டனையைக் குறைக்க முடியும். மொத்தம் 16 கருணை மனுக்கள் மீது குடியரசுத் தலைவர் முடிவெடுத்துள்ளார். அவரது முடிவு குறித்து நான் எனது கருத்தைக் கூற முடியாது.
இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டப் பிரிவு 433 ஏ-யின் கீழ், 14 ஆண்டுகளை சிறையில் கழித்த ஆயுள் தண்டனைக் கைதிகள் நன்னடத்தையின் அடிப்படையில் தண்டனைக் காலத்துக்கு முன்னரே விடுதலை பெறுவதற்கு தகுதி பெற்றிருக்கிறார்கள் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது என்றார் சிதம்பரம்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ப.சிதம்பரம் கூறியது: பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சிக் காலத்தில் ஒரு கருணை மனு மீது கூட முடிவெடுக்கப்படவில்லை. உள்துறை அமைச்சராக அத்வானி இருந்தபோது, 14 கருணை மனுக்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டன. அவற்றில் ஒரு மனு மீது கூட முடிவெடுக்கப்படவில்லை என்றார்.
No comments:
Post a Comment