வள்ளியூர்:கூடங்குளம் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் உதயகுமாரை கைது செய்வதற்கான கைது வாரண்ட் கோரி, வள்ளியூர் நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக அணுஉலை எதிர்ப்பு குழுவினர் மீண்டும் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்தனர்.
இடிந்தகரையில் மே முதல் தேதி துவங்கிய சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம்,நேற்று 10 வது நாளை எட்டியது. இந்த உண்ணாவிரதத்தில் கூடங்குளம், உவரி, கூட்டப்புளி, கூத்தங்குழி, பெருமணல், விஜயாபதி, உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் பங்கேற்பார்கள் என உதயகுமார் தெரிவித்திருந்தார். போராட்டம் உண்ணாவிரதமாக மட்டுமல்லாமல், மக்களை திரட்டி அணு உலையை நோக்கி வரலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இதனால்,நேற்று போலீசார் குவிக்கப்பட்டனர். கூடங்குளத்தை சுற்றிலும், 7 கி.மீ.,க்கு, 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில்,மிகப்பெரிய அளவில் நாளை போராட்டம் நடத்தப் போவதாக உதயகுமார் அறிவித்துள்ளதை தொடர்ந்து அங்கு கூடுதல் எண்ணிக்கையிலான போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் உதயகுமார் மீது,போலீசார் ஏற்கனவே சுமார் 20 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இதில் ஒன்று இடிந்தகரை ஊராட்சி தலைவரின் கணவர் சகாயராஜை தாக்கியதாக கூறப்படுவது தொடர்பானதாகும்.
அந்த வழக்கில் உதயகுமாரை கைது செய்வதற்கான வாரன்ட் பெற வள்ளியூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர்.
ஆனால் அதில்,உதயகுமார் உள்ளிட்டவர்களின் வயது குறிப்பிடப்படவில்லை என்றும், எனவே, மீண்டும் நாளை வாரன்ட் பெற, போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்படும் என போலீஸ் வட்டாரங்களில் தெரிவித்தனர்.
இதனிடையே, உதயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்றைய போராட்டத்தை, வாபஸ் பெறுகிறோம். கடந்த ஒன்பது மாத கால போராட்டத்தில், நாங்கள் வன்முறையில் இறங்கவில்லை. எனவே, அதிகாரிகள் பயப்பட வேண்டாம்.
மக்களும், இடிந்தகரைக்கு வருவதற்கு பதிலாக,தங்களது கிராமங்களிலேயே உண்ணாவிரதம் இருக்கும்படி கேட்டுள்ளோம். வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில், குடும்ப அட்டைகள் குவிந்தவண்ணம் உள்ளன. அவற்றை இன்னமும் எண்ணி முடிக்க முடியாததால், அவற்றை பின்னர் ஒப்படைக்க உள்ளோம்.
உண்ணாவிரதம் இருப்பவர்களில் பலரும், உடல்நலம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், மத்திய, மாநில அரசுகள், எங்கள் போராட்டத்தை கண்டு கொள்ளவில்லை. பேச்சுவார்த்தைக்கும் அழைக்கவில்லை. எனவே, பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் வர தயாராக இருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment