9 Jan 2013
மும்பை:மஹராஷ்ட்ரா மாநிலம் துலேயில் சில தினங்களுக்கு முன்பு நிகழ்ந்த கலவரத்தில் முஸ்லிம் இளைஞர்கள் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட ரகளையை தொடர்ந்து போலீசாரை தாக்கினார்கள் என பொய்யாக குற்றம் சாட்டி இச்சம்பவத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லாத அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை போலீஸ் தேடி பிடித்து சுட்டுக் கொலைச் செய்த கொடூரம் துலேயில் நிகழ்ந்துள்ளது.
மும்பையில் இருந்து 324 கி.மீ தொலைவில் உள்ள துலேயில் மச்சி பஜாரில் வைத்து ஐந்து முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். முட்டையை விற்பனைச் செய்வதற்காக வந்த அஸீம் ஷேக்(24), காய்கறி வாங்க வந்த இளைஞரான மார்க்க அறிஞர் ஆஸிஃப் அப்துல் ஹலீம்(வயது 30), 12-வது வகுப்பு பயிலும் ரிஸ்வான் ரஈஸ் பட்டேல்(வயது 17), எலக்ட்ரீசியன் இம்ரான் அலி கமருத்தீன்(வயது20) ஆகியோர் மரணமடைந்துள்ளனர். சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்ட இன்னொரு நபர் நேற்று முன் தினம் மரணமடைந்தார். ஆனால், அவரது பெயர் விபரங்களை போலீஸ் வெளியிடவில்லை.
மார்க்கெட்டில் வேலைக்காக வந்த யூனுஸ் அப்பாஸ் ஷா என்ற 24 வயது நபர் கழுத்தில் வெட்டு பட்டு கவலைக்கிடமான நிலையில் மும்பை கே.இ.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை மாலையில் மச்சி பஜாரில் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காததால் உணவு கடை நடத்துபவருக்கும், இரண்டு இளைஞர்களுக்கும் இடையே உருவான வாக்குவாதம் கலவரத்தில் முடிவடைந்ததாக கூறப்படுகிறது.
கலவரம், அருகில் உள்ள பாலா பஜார் மற்றும் மாதவ்புராவிற்கும் பரவியது. இரு பிரிவினர் இடையே நிகழ்ந்த மோதலில் போலீசார் மீது தாக்குதல் நடந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், போலீஸார் முஸ்லிம்களை மட்டுமே தேடிப் பிடித்து சுட்டுக் கொலைச் செய்துள்ளனர். இரு பிரிவினர் இடையே நிகழ்ந்த மோதலின்போது போலீஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்றால், ஏன் இச்சம்பவத்தில் எவ்வித தொடர்பும் இல்லாத மார்க்கெட்டில் பல்வேறு தேவைகளுக்காக வந்த அப்பாவி முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு
நடத்தவேண்டும் என்ற கேள்விக்கு போலீசாரிடம் பதில் இல்லை.
நடத்தவேண்டும் என்ற கேள்விக்கு போலீசாரிடம் பதில் இல்லை.
போலீசாரின் துப்பாக்கியில் இருந்து சீறிப் பாய்ந்த தோட்டா இம்ரான் அலி என்ற அப்பாவி முஸ்லிமின் உயிரை பலிவாங்கிய போது, ஒரு இளைஞனின் திருமண கனவுகளும் சேர்ந்தே பலிவாங்கப்பட்டது. வருகிற மே மாதம் இம்ரான் அலிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த வேளையில் அவர் போலீசாரின் அக்கிரமத்திற்கு பலியாகிவிட்டார்.
ஹாஃபிஸ் ஆஸிஃப் அப்துல் ஹலீம் என்ற இளம் மார்க்க அறிஞரை எவ்வித காரணமுமின்றி போலீஸ் கலவரத்தில் ஈடுபட்டார் என்று குற்றம் சாட்டி சுட்டுக் கொலைச் செய்துள்ளது. துணை தாசில்தாரான அப்துல் ஹலீம் அன்சாரியின் மகன் தாம் ஆஸிஃப். மூத்த அதிகாரிகளோ, சக ஊழியர்களோ தனக்கு ஆறுதல் கூறக் கூட வரவில்லை என்று அப்துல் ஹலீம் கூறுகிறார்.
“33 ஆண்டுகளாக அரசுக்காக உழைத்துள்ளேன். இத்தகைய பாரபட்சமான அரசுக்காக இனி சேவை செய்யமாட்டேன்” என்று அப்துல் ஹலீம் சபதம் செய்கிறார்.
போலீஸாருக்கு பயந்து ஓடி தப்ப முயன்ற 12-ஆம் வகுப்பு பயிலும் ரிஸ்வான் ரஈஸ் பட்டேலின் முதுகில் இரண்டு தடவை போலீஸ் துப்பாக்கியில் இருந்து வெளியான தோட்டா துளைத்துள்ளது.17 வயது சிறுவனை சுட்டுக் கொலைச் செய்த போலீஸின் நடவடிக்கையை எவ்வாறு ஏற்றுக்கொள்ள இயலும் என்று ரிஸ்வானின் தாய் மாமன் ஆரிஃப் பட்டேல் கேள்வி எழுப்புகிறார்.
மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு முட்டைகளை விற்பனைச் செய்ய வந்த அஸீம் ஷேக் கலவரத்தில் ஈடுபட்டார் என்பது போலீஸின் விசித்திரமான கண்டுபிடிப்பாகும். அஸீம் ஷேக்கின் தந்தை நஸீர் ஷேக் துயரத்தை அடக்க முடியாமல் கூறுகிறார்: “அல்லாஹ்வின் மீது அனைத்தையும் சாட்டிவிட்டேன். அவன் நீதி வழங்குவான் என்று ஆறுதல் அடைகிறேன். செல்லமாக வளர்த்திய மகனை இழந்துவிடுவதன் வேதனையை எந்த மதத்தைச் சார்ந்த தந்தையாலும் தாங்கமுடியாது.”
2008-ஆம் ஆண்டும் துலேயில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. ஒரு வாரம் நீண்ட கலவரத்தில் போலீஸ் முஸ்லிம்கள் மீது இவ்வளவு கொடூரமாக தாக்குதல் நடத்தவில்லை. அன்று ஒரு வாரத்தில் சாதிக்க முடியாதவற்றை இன்று ஒரு நாளில் சாதித்துவிட்டார்கள் என்று சமூக ஆர்வலரான ஆஸிஃப் பட்டேல் கூறுகிறார்.
இதனிடையே கடுமையாக காயமுற்ற யூனுஸ் அப்பாஸிற்கு மருத்துவமனையில் சிகிட்சை மறுக்கப்பட்டுள்ளது. கழுத்தில் வெட்டுப்பட்ட அப்பாஸ் கவலைக்கிடமாக இருந்த போதிலும் பொது வார்டில் 12 மணிநேரம் கிடத்தியிருந்தனர் என்று அவரது சகோதரர் முக்தார் ஷா குற்றம் சாட்டுகிறார். திங்கள் கிழமை அன்று தான் அப்பாஸ் இண்டன்சிவ் கேர் யூனிட்டிற்கு மாற்றப்பட்டார்.
ஆனால், துப்பாக்கிச்சூட்டை நியாயப்படுத்த போலீஸ் முயற்சிகளை துவக்கியுள்ளது. மாநகராட்சி தேர்தலுக்கு முன்னோடியாக அக்டோபர் மாதம் சில முஸ்லிம் அரசியல் தலைவர்கள் நடத்திய உணர்ச்சியை தூண்டும் உரைகள்தாம் கலவரத்திற்கு காரணம் என்று போலீஸ் கூறுகிறது. கலவரத்தில் காயமடைந்த 200 பேரில் பாதிக்கும் மேற்பட்டோர் போலீசார் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
துலேயில் உள்ள முஸ்லிம்களிடம், போலீஸ் முஸ்லிம்களுக்கு கொடுமை இழைக்கிறது என்றும், வாய்ப்புக் கிடைத்தால் போலீசார் மீது தாக்குதல் நடத்தவேண்டும் என்று சில முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பேசிய உரைகள் கிடைத்துள்ளதாகவும், இதுக் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் டி.ஜி.பி ஜீவ் தயாள் கூறுகிறார். சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ அபூ ஆஸ்மியின் உரையும் இதில் அடங்கும் என்று போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
ஆனால், நிரபராதிகளான முஸ்லிம்கள் பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களை விடுதலைச் செய்து குற்றவாளிகளான போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று துலேயில் தான் உரை நிகழ்த்தியதாக அபூ ஆஸ்மி ஒரு ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இது துலேயில் மட்டுமல்ல, வாய்ப்பு கிடைத்த இடங்களில் எல்லாம் பேசியுள்ளேன் என்று ஆஸ்மி மேலும் கூறியுள்ளார்.
இதனிடையே, போலீஸ் வீடுகள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காயமடைந்து சிகிட்சைப் பெற்று வரும் ஃபாஹின் அக்தர் முஹம்மது கூறியுள்ளார்.
No comments:
Post a Comment