January 9, 2013

ஜார்கண்ட்: அர்ஜூன் முண்டா தலைமையிலான பா.ஜ.க அரசு கவிழ்ந்தது!



Jharkhand's BJP govt recommends dissolution of assembly
ராஞ்சி:ஜார்கண்ட் மாநிலத்தில் அர்ஜூன் முண்டா தலைமையிலான பா.ஜ.க அரசுக்கு அளித்து வந்த ஆதரவை ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி வாபஸ் பெற்றதை தொடர்ந்து ஆட்சி கவிழ்ந்தது. தலைநகர் ராஞ்சியில் செவ்வாய்க்கிழமை ஆளுநர் சையீத் அகமதைச் சந்தித்த மாநில முதல்வர் அர்ஜுன் முண்டா, தனது ராஜிநாமா கடிதத்தை அளித்தார். சட்டப் பேரவையைக் கலைக்க உத்தரவிட வேண்டுமென்றும் ஆளுநரிடம் அவர் கேட்டுக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: எனது பதவி விலகல் கடிதத்தை அளித்ததுடன், மாநில சட்டப் பேரவையைக் கலைக்க வேண்டுமென்ற அமைச்சரவையின் பரிந்துரையையும் ஆளுநரிடம் தெரிவித்துள்ளேன். எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பேரம் நடைபெறுவதைத் தடுக்க வேண்டும் என்பதற்காகவே பேரவையைக் கலைக்கக் கேட்டுக் கொண்டுள்ளேன் என்றார்.
அரசுக்கு ஆதரவு அளித்து வந்த ஜே.எம்.எம். ஆதரவை வாபஸ் பெற்றதை அடுத்து அர்ஜுன் முண்டா பதவி விலகல் முடிவை எடுத்தார். இது விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கும் வரையில் காபந்து அரசின் முதல்வராகத் தொடருமாறு அர்ஜுன் முண்டாவை ஆளுநர் கேட்டுக் கொண்டார்.
முன்னதாக சிபு சோரன், அவரது மகன் ஹேமந்த் சோரன் உள்பட ஜே.எம்.எம். எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரைச் சந்தித்து, பாஜக அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் அளித்தனர். அதைத் தொடர்ந்து அர்ஜுன் முண்டா தனது கட்சியினருடன் சென்று ஆளுநரைச் சந்தித்து ராஜிநாமா கடிதத்தை அளித்தார்.
இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலை குறித்து டெல்லியில் கருத்துத் தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஷகீல் அஹ்மது, “தங்கள் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது என்பதால் சட்டப் பேரவையைக் கலைக்க வேண்டுமென்று ஆளுநரிடம் பாஜக வலியுறுத்தியுள்ளது. ஆனால் அதனை ஆளுநர் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.
28 மாதங்களுக்குப் பின் தங்களிடம் ஆட்சியை ஒப்படைப்பதாக பாஜக முதலில் கூறியிருந்தது என்று அறிவித்த ஜே.எம்.எம்., ஹேமந்த் சோரனை முதல்வராக்க வேண்டுமென்று பாஜகவிடம் வலியுறுத்தியது. ஆனால் இப்படி எந்த ஒப்பந்தமும் இல்லை என்று பாஜக மறுத்து விட்டது. இதையடுத்து மாநில அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஜே.எம்.எம். திங்கள்கிழமை அறிவித்து, அதனைச் செயல்படுத்தி விட்டது. இதையடுத்து 28 மாதகால அர்ஜுன் முண்டா தலைமையிலான அரசு முடிவுக்கு வந்துவிட்டது.
2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜார்க்கண்ட் மாநில பேரவைத் தேர்தலுக்குப் பின் பாஜக – ஜே.எம்.எம். தலைமையிலான கூட்டணி அமைந்தது. 2010 செப்டம்பர் 11ஆம் தேதி அர்ஜுன் முண்டா தலைமையில் அரசு அமைந்தது. ஆனால் சமீபத்தில் ஆட்சி அதிகாரத்தை தங்களிடம் ஒப்படைத்து, ஹேமந்த் சோரன் முதல்வராக வழி விட வேண்டுமென்று ஜே.எம்.எம். வலியுறுத்தியதை அடுத்து கூட்டணியில் பிளவு ஏற்பட்டது.
காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் ஆட்சி அமைக்க சிபு சோரன் கட்சி முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூழ்நிலையில் சட்டப் பேரவையைக் கலைக்கக் கூடாது என்று காங்கிரஸ் வலியுறுத்தியிருப்பது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. அதே நேரத்தில் ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்கவோ, ஆட்சி அமைக்க முன்வரும் கட்சிக்கு ஆதரவு அளிக்கவோ காங்கிரஸ் முனைப்புக் காட்டவில்லை. ஏனெனில் முன்பு சுயேச்சை எம்.எல்.ஏ.வான மது கோடாவுக்கு ஆதரவு அளித்து, அவர் செய்த பெரும் ஊழல்களால் மக்கள் மத்தியில் காங்கிரஸூக்கும் அவப்பெயர் ஏற்பட்டது. இதுவே ஜார்க்கண்ட் மாநில விஷயத்தில் காங்கிரஸ் தலைமை தீவிரமாக செயல்படாததற்குக் காரணம் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதே நேரத்தில் ஜேஎம்எம் உள்ளிட்ட பிற கட்சிகளுடன் இணைந்து மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் முயற்சியை காங்கிரஸ் மேற்கொள்ள வேண்டுமென்று லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment