January 12, 2013

ஐக்கிய ஒப்பந்தம் உருவாக்க ஃபலஸ்தீன் தலைவர்கள் ஒப்புதல்!

கெய்ரோ: ஐக்கிய ஒப்பந்தம் உருவாக்க ஃபலஸ்தீனில் ஹமாஸ்-ஃபத்ஹ் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். இதனை எகிப்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2011-ஆம் ஆண்டு உருவாக்கிய நல்லிணக்க ஐக்கிய ஒப்பந்தம் தொடர்பாக எகிப்திய அதிபர் முஹம்மது முர்ஸியின் மத்தியஸ்தத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டது. ஃபலஸ்தீன்
ஆணைய அதிபர் மஹ்மூத் அப்பாஸும், ஹமாஸ் இயக்க அரசியல் விவகார தலைவர் காலித் மிஷ்அலும் இப்பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர். ஒரு வருடத்திற்கிடையே இருவரும் முதன் முறையாக பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
2011-ஆம் ஆண்டு ஜூன் மாதம் உருவாக்கிய ஐக்கிய ஒப்பந்தம் தொடர்பாக இதுவரை ஆக்கப்பூர்வமான கருத்தொற்றுமை ஏற்படவில்லை. இந்த நிலையில் முர்ஸியின் முயற்சியில் பேச்சுவார்த்தை நடந்தது. மிக விரைவில் ஐக்கிய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த தலைவர்கள் சம்மதித்ததாகவும், பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் அப்பாஸின் குழுவைச் சார்ந்த நபீல் அபூ தானியா கூறுகிறார். மேலும் பேச்சுவார்த்தை தொடரும் என்று அவர் கூறினார்.
ஹமாஸ் தலைவர்கள் பேச்சுவார்த்தை தொடர்பாக இதுவரை பதில் அளிக்கவில்லை. ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த கால அவகாசம் குறித்து விவாதிக்க பிப்ரவரி முதல் வாரம் மீண்டும் இரு தலைவர்களும் கூட்டத்தில் கலந்துகொள்வர்.
நவம்பர் மாதம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு வலுவான பதிலடிக் கொடுத்ததில் ஹமாஸுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது. ஃபலஸ்தீனுக்கு ஐ.நா பார்வையாளர் அந்தஸ்து கிடைப்பதற்கான அப்பாஸி முயற்சிகள் வெற்றிப் பெற்றது ஃபத்ஹ் இயக்கத்திற்கும் சாதகமாகியுள்ளது. ஒற்றுமை பேச்சுவார்த்தை நடத்த இது உரிய நேரம் என்று எகிப்திய தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment