கடந்த
சில தினங்களுக்கு முன்பு ஊதிய உயர்வு தொடர்பாக தொழிலாளி ஒருவர் தொடர்ந்த
வழக்கில் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், நீதிமன்றத்தில் முன்னிலை
ஆகாதது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்,
நீதிமன்றத்தில் தலைமைச் செயலாளர் முன்னிலை ஆகாமல் இருந்தால் பிடியாணை
பிறப்பிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில்,
தனியார் நிலம் விற்பனை
தொடர்பான
வழக்கு விசாரணையின் போது, சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் ஜார்ஜ்,
நீதிமன்றத்தில் நேற்று முன்னிலை ஆகதாது குறித்து சென்னை உயர் நீதிமன்ற
நீதிபதி ஆறுமுகசாமி, கடும் விமர்சனத்தை முன் வைத்து இன்று நீதிமன்றத்தில்
முன்னிலை ஆக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். ஆனால் காவல்துறை ஆணையாளர்
ஜார்ஜ், இன்றும் நீதிமன்றத்தில் முன்னிலை ஆகாதது காவல்துறை வட்டாரத்தில்
பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை ஈக்காட்டுதாங்கலில் இருக்கும் தனியார் நிலம் விற்பனை தொடர்பாக எழுந்த பிரச்சினையில் ஸ்ரீதர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து உள்ளார். அதில், ‘இந்த வழக்கில் சென்னை மாநகர குற்றப் பிரிவு காவல்துறையினர் முறையான புலன் விசாரணை நடத்தவில்லை. சட்டப்படி விசாரணை நடத்துவதற்கு பதிலாக, கட்டப் பஞ்சாயத்து மூலம் பிரச்னையை தீர்க்கவே முயல்கின்றனர் என்று கூறி இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி சென்னை காவல்துறை ஆணையாளர் ஜார்ஜ், உதவி ஆணையாளர் முருகேசன் ஆகியோர் செயல்பாடுகள் ஒட்டு மொத்த தமிழக அரசுக்கும், சென்னை மாநகர காவல்துறைக்கும் கரும்புள்ளியாக அமைந்து விட்டது.
சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் என்பவர் காவல் துறையின் ஓர் உயர் அதிகாரி மட்டுமே. அவர் புனித ஜார்ஜ் கோட்டையின் சக்கரவர்த்தி அல்ல. பொதுமக்களின் குறைகளை கேட்க ஆணையாளர் மறுப்பது நியாயம் இல்லை.
இந்த வழக்கின் தற்போதைய நிலை குறித்து ஆராய்வதற்காக இந்த வழக்கு மீண்டும் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். அப்போது, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் நீதிமன்றத்தில் முன்னிலை வேண்டும் என்று நீதிபதி கூறி இருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ‘‘பல்வேறு பணிகள் இருப்பதால், காவல்துறை ஆணையாளர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலை ஆகவில்லை.” என்று அரசு வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.
அதைக் கேட்ட நீதிபதி கோபத்துடன், ‘‘ஒரு வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் முன்னிலை ஆகி விளக்கம் அளிப்பதும், பணியில் ஒரு பகுதி தான். நாட்டின் தலைநகர் டெல்லியில் இது போன்ற வழக்குகள் வரும் போது காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் முன்னிலை ஆகி விளக்கமளிக்கிறார்கள் எனும் போது, இங்கு மட்டும் ஏன் முடியாது?’’ என்று வினா எழுப்பினார். பின்னர் வருகிற 17 ஆம் தேதி காவல்துறை ஆணையாளர் ஜார்ஜ் கண்டிப்பாக நீதிமன்றத்தில் முன்னிலை ஆக வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment